மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் புது முயற்சி நீரிழிவு, ரத்த அழுத்தம் கண்டுபிடிக்க புதிய சோதனை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினால் 9.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் புராதன சின்னமாக ஆனைப்புலி பெருக்கா எனும் மரம் இருக்கிறது. இந்த மரம் ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடியது. 500 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. இம்மரத்தின் சிறப்புகளை, வரலாற்றின் குறிப்பேட்டை முதல்வர்  திறந்து வைக்கிறார். மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ், ஒரு புதிய முயற்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் யாரெல்லாம் 18 வயதிற்கு மேற்பட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறிதல் போன்ற பல பரிசோதனைகள் செய்கிற மையத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் ஒரு கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். இவ்விலக்கை நோக்கி மிக வேகமாக சென்றடைவதற்கு மருத்துவமனையிலேயே பயனாளிகளை கண்டறிவதால் இத்திட்டம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினால் நேற்று காலை 7 மணி வரை 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பயனடைந்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்கான இ.என்.டி. மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு