பொதுமக்கள் சாலை மறியல்

திட்டக்குடி, மே 11: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த பெரங்கியம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் ஒரு குடம் அளவிற்கு தான் தண்ணீர் வருகிறது. அதுவும் ஒரு சில நாட்களில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும், செயலாளரிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன் கடலூர் – திருச்சி மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நிரந்தரமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்