பெற்றோரை பிரிந்த 2 குழந்தைகள் 8 ஆண்டுகளுக்கு பின் உடன்பிறந்தோரிடம் ஒப்படைப்பு: மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை: திருச்சியை சேர்ந்தவர்கள் சண்முகம் – பார்வதி தம்பதி. இவர்கள் 4 ஆண், 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். ஜோதிட தொழில் செய்து வந்த இத்தம்பதி, கடந்த 2013ல் மதுரைக்கு வந்து சாலையோரத்தில் தங்கினர். அப்போது, மதுரை ரயில் நிலையம் அருகே இவர்களின் கடைசி 2 குழந்தைகளான 7 வயது பெண் குழந்தை மேரி,  2 வயது ஆண் குழந்தை விஜய் இருவரும் வழி தவறி சென்று விட்டன. அழுதபடி திரிந்த இரு குழந்தைகளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர் மதுரையில் பல மாதங்கள் தேடிப்பார்த்தும், குழந்தையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் திருச்சி திரும்பிய இவர்கள் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து இறந்தனர். இந்நிலையில் இவர்களது உறவினரான குமார் என்பவருக்கு இரு குழந்தைகளும், மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரின் கண்காணிப்பில் இருக்கும் தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை வந்தார். குழந்தைகள் நலக்குழுவில் விண்ணப்பம் அளித்தார். நலக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் குழுவினர் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை விஜய் கடச்சனேந்தல் ஜோபிரிட்டோ இல்லத்தில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருவதும், 9ம் வகுப்பு படிக்கும் மேரி திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. தகவலறிந்து சகோதர, சகோதரிகளான தஞ்சாவூரில் உள்ள குமார், புதுக்கோட்டையில் உள்ள ராஜ்குமார், மாசானம், மணப்பாறையில் உள்ள மீனாட்சி உள்ளிட்டோர் மதுரை வந்தனர். இவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, இந்தாண்டு இங்கேயே படிப்பை தொடரட்டும். அடுத்தாண்டு தஞ்சாவூரில் படிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கிளம்பிச் சென்றனர். தஞ்சாவூர் குமார் கூறும்போது, ‘‘எங்கள் சகோதரனும், சகோதரியும் மீண்டும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்….

Related posts

வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை

கடையம் சார்பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு