பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஆதிபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பெரியபாளையம்: ஆத்துப்பாக்கம் மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்நிலையில் இக்கோயில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி அங்குரார்பணம், கும்பாலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு விமான கோபுரத்துக்கும், அதைத்தொடர்ந்து மூலவர், பரிகார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்