பெரம்பலூர் அருகே வைக்கோல் போரில் நாட்டு துப்பாக்கி பதுக்கல்

 

பெரம்பலூர்,ஜன.9: பெரம்பலூர் அருகே வைக்கோல் போரில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட லாடபுரம் கிராமம், போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் தங்கமணி(55). இவர், தனக்கு சொந்தமான வயல்காட்டில் மாட்டிற்கு வைக்கோல் போர் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு தங்கமணியின் மகன் ரத்தினகிரி (36) என்பவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக வைக்கோல் கட்டை நகற்றியுள்ளார். அப்போது, வைக்கோல் கட்டுக்குள் நாட்டுத் துப்பாக்கி ஒன்று சொருகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக ரத்தினகிரி, லாடபுரம் ஊராட்சி தலைவர் பெருமாளிடம் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், பெரம்பலூர் காவல்நிலையத்திற்கு தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், நாட்டுத் துப்பாக்கி எஸ்பிஎம்எல் ரகத்தை சேர்ந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து நாட்டுத் துப்பாக்கி யாருக்கு சொந்தமானது, எங்கிருந்து பெறப்பட்டது. வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது தொடர்பாக தங்கமணி மற்றும் ரத்தனகிரி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்