பெண் குழந்தைகளுக்கு ₹50 ஆயிரம் டெபாசிட் சிலிண்டருக்கு விரைவில் ₹300 மானியம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, ஜூன் 10: புதுவையில் சிலிண்டருக்கு ரூ300 மானியம் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது: சாலையோரத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் தான் கடை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தினமும் முதலீடு தேவைப்படும். இதனால் கந்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். நிறைய பேர் சிரமப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருவதையும் பார்க்கலாம். சாலையோர கடை வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் சிறிய முதலீடு தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை உணர்ந்துதான் வங்கிகள் மூலம் கடனுதவி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நிறைய சாலையோர கடைகளில் வியாபாரம் நடக்கிறது. சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும்.

புதுவையில் கடந்த முறை 1,567 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் 608 பேர் தான் சரியாக கடனை செலுத்தி, 2வது முறையாக ரூ.20 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனர். வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் மேலும், மேலும் வங்கியில் கடனுதவி பெற்று வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ரூ.20 ஆயிரம் வீதம் கடனுதவி பெற்ற 608 பேரில் 57 பேர் தான் தலா ரூ.50 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனர். அப்படி என்றால், வியாபாரிகள் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை என்றுதான் அர்த்தம். வங்கியில் குறைந்த வட்டியில் கடனுதவி கொடுக்கப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், வங்கிகள் இழுத்தடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவேன். வங்கியில் கடன் வாங்குவதற்காக ஒருவர் 6 மாதம் சென்று வந்தால், அவர் கடன் வாங்கும் எண்ணத்தையே விட்டு விடுவார். அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிடும்.

எனவே, வங்கிகள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஒரே சமயத்தில் அனைத்து ஆவணங்களையும் பெற்று கடனுதவி அளிக்க வேண்டும். புதுச்சேரி அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சுமார் 70 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கின்ற நிலையில் இத்திட்டம் செயல்படவுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டமும், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் ஆகிய திட்டங்களை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
புதுச்சேரியில் தார் சாலைகள் மிக மேசமாக இருந்தது. இதையெல்லாம் இந்த அரசு சரி செய்யுமா? என நினைத்தார்கள். ஆனால், எல்லா சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.66 கோடியை ஆரம்பத்திலேயே ஒதுக்கி கொடுத்துள்ளோம். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனமாக செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்