பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை

சென்னை, மே 23: பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அடுத்த மாங்காடு அம்பாள்நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி (45). இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி-மாங்காடு சாலையில் உள்ள ஒரு கடையில் ராஜாஜி டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென டீக்கடைக்குள் புகுந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாஜியை சரமாரியாக வெட்டினார். இதில் ராஜாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து டீக்கடையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், அந்த மர்ம நபர் சாதாரணமாக நடந்து சென்று பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், ராஜாஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து அவரது குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜாஜியின் கொலைக்கான காரணம் என்ன, கொலையாளி யார் என்பது குறித்து கடைக்குள் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வாகனப் போக்குவரத்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது