புன்னப்பாக்கம் கிராமத்தில் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அங்குள்ள மரத்தில் இருந்த ராட்சத தேன்கூட்டில் நேற்று கல் எறிந்துள்ளனர். இதனால் அதிலிருந்த தேனீக்கள் 3க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மக்களை துரத்தித் துரத்தி கொட்டியது. இதில் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைவரும் தேனீக்களைக் கண்டு அலறியடித்து ஓடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியோடு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அப்பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டை கலைத்து தேனீக்களை விரட்டினர். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் துரத்தித் துரத்தி தேனீக்கள் கொட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

கலைவாணி மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் 100% தேர்ச்சி

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு

விகேபுரத்தில் ரூ.3 லட்சம் நகைகள் ெகாள்ளை