பிடானேரி சமத்துவபுரத்தில் காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம்

சாத்தான்குளம், செப். 12: பிடானேரி சமத்துவ புரத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். சாத்தான்குளம் யூனியன் பிடானேரி பஞ்சாயத்திற்குட்பட்ட சமத்துவபுரம் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், குடிநீர் பிடிப்பதற்காக அருகிலுள்ள கிராம பகுதிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமத்துவபுரம் காலனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை காலிகுடங்களுடன் பிடானேரி சமத்துவபுரம் பயணியர் நிழற்குடை அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, மெஞ்ஞானபுரம் எஸ்ஐ சண்முகராஜ் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்