பார்க்கிங் ஊழியர் எனக்கூறி ஆசாமி எஸ்கேப் மெரினாவை சுற்றிப்பார்க்க வந்த ஆசிரியையின் கார் திருட்டு: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை, மே 18: கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் சுமித்ரா தங்கஜோதி (37). மகாராஜபுரம் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியை. கடந்த 11ம் தேதி உறவினர் செல்வகுமாருடன் காரில் குடும்பத்துடன் செங்குன்றம் உறவினர் வீட்டிற்கு வந்தார். முன்னதாக, காரை சென்னையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு விடவே சுமித்ரா வந்துள்ளார். பிறகு சொந்த கார் என்பதால் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க காரில் கடந்த 12ம் தேதி மாலை மெரினா வந்தார். கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சர்வீஸ் சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எனவே சுமித்ரா தனது காரை நிறுத்த சர்வீஸ் சாலையில் இடம்தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது, உழைப்பாளர் சிலை பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்த முயன்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஆசிரியை சுமித்ராவிடம் ‘நான் சென்னை மாநகராட்சி பார்க்கிங் ஊழியர்’ என்றும், என்னிடம் கார் சாவியை கொடுங்கள். நான்தான் அனைத்து வாகனங்களையும் பார்க்கிங் செய்து வருகிறேன். உங்கள் காரை பத்திரமாக பார்க்கிங் செய்து தருகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
மெரினாவிற்கு முதன்முறையாக சுமித்ரா வந்ததால், அவரும் மாநகராட்சி ஊழியர் தான் என நம்பி தனது காரின் சாவியை கொடுத்துவிட்டு மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுவிட்டார்.

திரும்பி வந்தபோது தனது காரை பார்க்கிங் பகுதி முழுவதும் தேடியும் கிடைக்க வில்லை. அங்கு பார்க்கிங் டோக்கன் போடும் நபர்களிடம், மாநகராட்சி பார்க்கிங் ஊழியர் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், மாநகராட்சி சார்பில் யாரும் பார்க்கிங் ஊழியர் நியமிக்கப்படவில்லை என்று கூறி உள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரா தனது கார் திருடப்பட்டதை உணர்ந்து பதற்றம் அடைந்தார். சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மெரினா சர்வீஸ் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று நூதன முறையில் காரை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை