பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு: பொக்லைன் மூலம் மீட்க முயன்றபோது தலைதுண்டாகி தொழிலாளி பரிதாப பலி

* தாம்பரத்தில் சோக சம்பவம்
* ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

தாம்பரம், மார்ச் 17: தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தாம்பரம் மாநகராட்சியிடம் இருந்து வி.வி.வி என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆதிநகர் காமராஜ் தெருவில் நடந்த பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (28), தென்காசி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் நீளமாக சுமார் 8 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. மாலையில் அந்த பள்ளத்தில் இறங்கி குழாய்களை பதிக்கும் பணிகளில் முருகானந்தம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

சுதாரித்துக் கொண்ட சண்முகசுந்தரம் உடனடியாக மேலே ஏறி வந்துவிட்டார். இதனால் அவர் காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினார். ஆனால் பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகானந்தம் மீது முழுவதும் மண் சரிந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் முருகானந்தத்தை காப்பாற்ற போராடினர். அப்போது பொக்லைன் ஓட்டுநர் விஜய் என்பவர் முருகானந்தம் மீது சரிந்த மண்ணை அகற்றி அவரை மீட்க முயற்சித்தார். இதில் எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தின் தலை ெபாக்லைன் இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி வெளியே வந்தது. அப்போது அங்கு மீட்பு பணியில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொக்லைன் ஓட்டுனருக்கு ஆலோசனைகள் வழங்கி பள்ளத்தில் சரிந்த மண்ணை அகற்ற முயற்சித்தனர். ஆனால் குழியில் தண்ணீர் வரத் தொடங்கி மண் முழுவதும் சகதி போல் ஆனதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி மண்ணில் சிக்கியிருந்த முருகானந்தத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உரிய பாதுகாப்பு இன்றியும், கவனக்குறைவாகவும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதோடு பணியின்போது உடனிருந்த சண்முகசுந்தரம் மற்றும் பொக்லைன் ஓட்டுநர் விஜய் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் பொக்லைன் இயந்திரம் மூலம் காப்பாற்ற முயன்றதால்தான் முருகானந்தத்தின் தலை துண்டானதாக கூறப்படுகிறது. இருப்பினும் முருகானந்தம் மண்ணில் சிக்கி ஏற்கனவே உயிரிழந்தாரா, அல்லது மண்ணில் சிக்கி மயங்கி இருந்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயற்சித்த போது தலை துண்டாகி உயிரிழந்தாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி