பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்திவரம் – கூடுவாஞ்சேரி கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

 

கூடுவாஞ்சேரி, மே 26: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு, கே.கே.நகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேற்று முன்தினம் மாலை திடீரென வந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, வார்டு கவுன்சிலர் கலைச்செல்வன், நகராட்சிகளின் செங்கல்பட்டு மாவட்ட மண்டல செயற்பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன், சுகாதார அலுவலர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

அப்போது நகராட்சிக்கு உட்பட்ட சிற்பி நகர், காமாட்சி நகர், அருள் நகர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பெய்த கனமழையின் போது உடைந்த பாலங்களை சீரமைக்க வேண்டும், நகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும், நகராட்சி முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் பழுது பார்க்க வேண்டும் என நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனாவிடம் மனு அளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட தலைமை செயலாளர், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பொன்மார் ஊராட்சியில் உள்ள போலச்சேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் மதிப்பில் குளம் மேம்பாட்டு பணிகளையும், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குளம் மேம்பாட்டு பணி தொடங்கப்பட்ட காலம், முடிக்கப்பட்ட காலம், பயன்படுத்தப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்