பயணிகளை கவரும் வகையில் அரக்கோணம்-வேளச்சேரி இடையே கலர்புல் மின்சார ரயில் இயக்கம்: பயணிகள் வரவேற்பு

சென்னை, ஜூன் 10: அரக்கோணம்- வேளச்சேரி இடையே பயணிகளை கவரும் விதத்தில் கலர்புல் மின்சார ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல், கடற்கரை, செங்கல்பட்டு, திருத்தணி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 100க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில் பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்கள் தீட்டிய 9 பெட்டிகளுடன் நவீன வசதி கொண்ட மின்சார ரயில் ஆவடி பணிமனையில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை புறப்பட்ட மின்சார ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர், அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னை வேளச்சேரிக்கு சென்றது. வண்ணமிகு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச்சென்றதை கண்ட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இதேபோல், அனைத்து மின்சார ரயில்கள் படிப்படியாக பல்வேறு வண்ணங்களில் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்

பெண்களை அவதூறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்