பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளரின் மேஜையில் கழிவுகளை கொட்டிய கவுன்சிலர் அரசு ஆவணங்கள் சேதம்

 

குமாரபுரம், ஜன.31: பத்மநாபபுரம் நகராட்சி 9வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் வினோத் குமார் (52). இவர் வழக்கம்போல் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் சாலையில் திடீரென சாக்கு மூட்டையில் கழிவுகளை சேகரித்த வினோத் குமார் அந்த அலுவலகத்தில் உள்ள துப்புரவு ஆய்வாளர் ஆறுமுக நயினாரின் அறைக்கு அதை கொண்டு சென்றார்.

கையில் சாக்குப்பையுடன் கவுன்சிலர் வருவதை கண்ட ஆறுமுக நயினார் சுதாரிப்பதற்குள், வினோத் குமார் அந்த சாக்கு பையில் இருந்த கழிவுகளை அங்கிருந்த மேஜையில் அப்படியே கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுக நயினார் இது குறித்து தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வினோத் குமார் அங்கிருந்து ஓடி விட்டாராம். மேஜை மீது கழிவுகள் கொட்டப்பட்டதால் அதில் இருந்த சில அரசு ஆவணங்கள் முற்றிலும் சேதமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து துப்புரவு ஆய்வாளர் ஆறுமுக நயினார் பத்மநாபபுரம் நகராட்சி கமிஷனர் லெனினிடம் புகார் அளித்தார்.இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தக்கலை காவல் நிலையத்திலும் வினோத் குமார் மீது லெனின் புகார் அளித்தார். இதன்பேரில் கவுன்சிலர் வினோத் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்