பக்தர்கள் ஏற்றிய தீபங்களின் எண்ணெய் நீரில் கலந்ததால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தில் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. தகவலறிந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் 25 பேர், செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் குளோரின் மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டன. பின்னர், மீன்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதா, குளத்தில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா, குளத்தில் உள்ள நீரில் ஏதாவது நச்சுத்தன்மை உள்ளதா அல்லது பக்தர்கள் அளித்த உணவால் மீன்கள் இறந்தனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், கார்த்திகை தீப திருநாளில் கோயில் குளக்கரையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றிய நிலையில், திடீரென பெய்த மழையால் விளக்குகளில் இருந்த எண்ணெய் மழை நீரோடு சேர்ந்து குளத்தில் கலந்ததே மீன்கள் செத்து மிதக்க காரணம் என தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோயில் குளத்தில் விளக்கேற்றுவதால், அந்த எண்ணெய் குளத்து நீரில் கலந்துள்ளது. எண்ணெய் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். இதனால் மீன்களால் சுவாசிக்க முடியாது. எனவே, மீன்கள் செத்து மிதந்துள்ளன. மேலும் நீரில் வேறு ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், ‘‘தை மாதம் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. எனவே, கோயில் நிர்வாகம் விளக்கு ஏற்றுவதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். குளத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் குளத்தில் கலப்பது நல்லது அல்ல. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக்கூடாது’’ என்றனர்.

நீரின் தன்மை பரிசோதனை
அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் சுமார் 7.52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆழம் 5.10 மீட்டர். குளத்தை சுற்றிலும் 10 மழைநீர் சேகரிப்பு குழாய்கள் உள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று மீன்கள் இறந்து குளத்தில் மிதந்ததை அறிந்ததும் உடனடியாக கோயில் மற்றும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீன்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டறியும் வகையில் மீன்வளத்துறையின் மூலம் குளத்தில் உள்ள நீரின் தன்மையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என கூறப்பட்டுள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு