நெல் விதைத்த நிலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து காஸ் கசிவு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த ஆதிச்சபுரம் ஊராட்சியில் ஓஎன்ஜிசி சார்பில் பிளாண்ட் அமைத்து கச்சா எண்ணெய், காஸ் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெய், காஸ் அனுப்புவதற்காக பூமிக்கு அடியில் வயல் பகுதிகளில் 6 அடி ஆழத்தில்  15 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரில் கச்சா எண்ணெய், காஸ் சுத்திகரிக்கப்பட்டு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமக்கோட்டை அரசு பவர் பிளாண்டுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக காஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பவர் பிளாண்டில் இருந்து அரசு சார்பில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி சார்பில் குழாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் விவசாயம் செய்யும் நிலங்களாகும்.இந்நிலையில் மன்னார்குடி அடுத்த மேலப்பனையூர் ஆறுகாணி பகுதியில் விவசாயி சிவக்குமார்  ஒரு ஏக்கர் வயலில் குறுவை சாகுபடிக்காக நெல் விதைப்பில் ஈடுபட்டார். விதை விதைத்து 10 நாட்களாவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று காலை சிவக்குமார் சென்றபோது அவரது வயலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் வெடித்து காஸ் வெளியேறி வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஓஎன்ஜிசி அதிகாரிகள் மற்றும் கோட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு  காஸ் கசிவை உடனடியாக நிறுத்துவதற்காக ஆதிச்சபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி பைப்லைனை ஆப் செய்தனர். குழாய் உடைப்பை சரி செய்வதற்காக ஓஎன்ஜிசி அதிகாரிகள்  வரவுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஓஎன்சிஜி சார்பில் குழாய்கள் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது.  இனி இந்த வயலில் சாகுபடி செய்ய முடியாது. எனவே ஓஎன்ஜிசி சார்பில் பழைய குழாய்களை அகற்றி விட்டு புதிய குழாய்கள் அமைக்க வேண்டும். குழாய் உடைப்பால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி