நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்கப்பட்டதா? திருமயம் மாஜிஸ்திரேட் அறிக்கை தர உத்தரவு

மதுரை: தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரிய வழக்கில், சென்னை ஐகோர்ட் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. குறிப்பாக, மேடைகள் அமைக்கக்கூடாது என கூறியிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14.9.2018ல் நடந்தது. இதில், பாஜகவின் அப்போதைய தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அங்கு, மேடை அமைப்பது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் லஞ்சம் வாங்குவதாக, தரக்குறைவான வார்த்தைகளில் பொதுவெளியில் விமர்சித்தார்.நீதிமன்றம் குறித்தும் அவதூறான கருத்துக்களை கூறியுள்ளார். இதனால், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எச்.ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட கோரியிருந்தேன். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை 2 மாதத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கடந்தாண்டு ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. பின்னர், மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கியது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, திருமயம் இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஏப். 27க்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை திருமயம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த செப். 15ல் தாக்கல் செய்யப்பட்டது’’ என்றார். மனுதாரர் வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘குற்றப்பத்திரிகைக்கு எண் வழங்கப்பட்டு இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி, திருமயம் நீதிமன்றத்தில் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் போலீசார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு எண் வழங்கி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தொடர்பான அறிக்கையை மாஜிஸ்திரேட் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 29க்கு தள்ளி வைத்தார். …

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு