நீட் பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

கோவை, ஏப்.30: நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 371 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய மூன்று மையங்களில் நடந்து வருகிறது.

இதில், துணி வணிகர் சங்கப்பள்ளியில் 103 மாணவர்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் தலா 54 மாணவர்கள் என மொத்தம் 211 மாணவ, மாணவிகள் நீட் பயிற்சியை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நீட் பயிற்சியானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் மே 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டன. இந்த தேர்வினை நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். மேலும், சில மாணவர்கள் நேற்று மாதிரி தேர்வுகளை எழுதவில்லை. இந்த விடுப்பட்ட மாணவர்களுக்கு இன்று மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி