நிதி நிறுவன மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தரலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

மதுரை, மார்ச் 17: மதுரையை சேர்ந்த நிதி நிறுவனத்தின் மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், அதுதொடர்பாக புகாரளிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது நண்பர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், சுந்தரம், ஜான், குணசீலன் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து ‘ரைசிங் பசுமை டெவலப்மென்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தவணை அடிப்படையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனவும், ஈடாக வீட்டு மனைகள் வழங்கப்படும் எனவும், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பணம் கட்டிய அசல் ரசீது மற்றும் ஆவணங்களுடன் தபால்தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் புகாரளிக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்களின் புகார் அடிப்படையில், அவர்களின் வைப்பு தொகையை திரும்ப பெற்றுத்தர சட்டரீதியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் ரிசர்வ் வங்கி அனுமதியற்ற நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது