நாடாளுமன்ற தேர்தலில் புதுவை பாஜ வேட்பாளர்? வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அமைச்சர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் சலசலப்பு

புதுச்சேரி, மார்ச் 2: புதுவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக முன்னிறுத்தப்படும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் அவர் உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜ கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக புதுச்சேரி மக்களவை தொகுதி உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு, கடந்த ஓராண்டாகவே அதற்கான பணிகளில் பாஜ முனைப்பு காட்டி வந்தது. கடந்த வாரம் புதுச்சேரிக்கு வந்த பாஜ தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இதை உறுதிப்படுத்தினார். ஆனால், கடந்த மாதம் 5-ம் தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘‘புதுச்சேரி மக்களவை தொகுதியில் நமது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சியான பாஜகவிடம் இதை உறுதிபட தெரிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியதால், சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் ரங்கசாமி, ‘‘மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜ வேட்பாளரின் வெற்றிக்கு நாம் முழுமனதோடு பணியாற்றி, வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த ஆட்சி அமைந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதை மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் பணியாற்ற வேண்டும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் மலர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் புதுச்சேரி உள்ளிட்ட 4 மாவட்ட பாஜ கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுரானா ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஆதரவு எம்எல்ஏ சிவசங்கரன் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் பெயர்களை கூறினர். இதையடுத்து நான்கு பேரில் ஒருவர் தான் வரும் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என மூத்த தலைவர்களிடம் பாஜ மேலிட பார்வையாளர் சுரானா கூறியதாக தெரிகிறது. பாஜ வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் தான் என அமைப்பு செயலர் பி.எல்.சுந்தோஷ், கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இந்த தகவலால் நமச்சிவாயம், கட்சியில் உள்ள தனது நெருங்கிய சகாக்களிடம் பேசுகிறாராம். மற்றபடி கடந்த 27ம் தேதியில் இருந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையாம். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது.

ராசி இல்லாத தேசிய அரசியல்?
புதுவையில் கடந்த காலங்களில் உள்துறை அமைச்சர், சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரசியல் செல்வாக்கான மனிதராக இருந்தவர் ப.கண்ணன். மாநில அரசியலில் அதிரடி காட்டியவர் அவர், காங்கிரஸ் சார்பில் எம்பி ஆனார். அதனை தொடர்ந்து அவர் மாநில அரசியலில் ஈடுபட்டார். ஆனால் எடுபடவில்லை. இவரை போன்று பாகூரை சேர்ந்தவரும் மெத்த படித்தவருமான ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்படுபவர் ராதாகிருஷ்ணன். இவர் எம்எல்ஏ, சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்பி ஆக தேர்வு ஆனார். அதனை தொடர்ந்து மாநில அரசியலில் சிறிது காலம் இருந்த அவர், அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றதாக அறிவித்துவிட்டார். இதனால் எம்பி ஆகி தேசிய அரசியலில் ஈடுபட்டால் அவரது அரசியல் வாழ்க்கை முடங்கி விடும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்