தொட்டபெட்டா சின்கோனா பகுதியில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காட்சியளிக்கும் சின்கோனா சிறை கட்டிடத்தை புனரமைக்க கோரிக்கை

ஊட்டி, ஆக. 17: ஊட்டி அருகே தொட்டபெட்டா சின்கோனா பகுதியில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காட்சியளிக்கும் சின்கோனா சிறை கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம், அவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. அதேசமயம் சுதந்திர போராட்ட தியாகிகளின் நரக பூமியாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களை, துன்புறுத்தியது மட்டுமின்றி பலரையும் அழைத்து வந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறைகளில் அடைத்து வைத்து, இங்கேயே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா, நடுவட்டம் சின்கோனா, மஞ்சூர் அருகே கேரிங்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள் சிறைகளாக இருந்தது. இவைகள் மிக மோசமான சிறைகளாக இருந்துள்ளன. 1850களில் இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் மலேரியா நோய்க்கு மருந்தான சின்கொய்னா நாற்றுகளை பெரு மற்றும் பொலிவியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நடுவட்டம், தொட்டபெட்டா உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நடவு செய்தனர். இவற்றை நடவு செய்ய உள்ளூர் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்களை பயன்படுத்தினர்.

பணிகள் மிகவும் மந்தமாக நடந்தது. இதனால் 1856 முதல் 1960ம் ஆண்டு வரை நடைபெற்ற ஓபியம் போர் என்று அழைக்கப்பட்ட பிரிட்டீஸ்-சீன போரில் ஆங்கிலேயர்களிடம் போர் கைதிகளாக பிடிபட்ட சீனர்கள் நாடு கடத்தப்பட்டு நீலகிரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் சுமார் 200 பேர் நடுவட்டம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தொட்டபெட்டாவில் உள்ள சின்கோனா சிறையில் 200 பேர் அடைக்கப்பட்டனர். தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் சின்கோனா பயிரிடும் பணிகள், மருந்திற்காக அவற்றின் பட்டைகளை உரிக்கும் பணிகளில் சீன கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன் பின் சில ஆண்டுகள் செயல்பட்ட இந்த சிறைகள் மூடப்பட்டன. நடுவட்டம் சிறை கட்டிடம் தற்போது தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவை புனரமைக்கப்பட்டு காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஊட்டி தொட்டபெட்டா சின்கோனா வளாகத்தில் உள்ள சிறைச்சாலை கட்டிடம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இதன் ஒரு பகுதியில் அஞ்சலகம் மட்டும் செயல்பட்டு வருகிறது. எனவே முழு கட்டிடத்தையும் புனரமைத்து அருங்காட்சியமாக மாற்றி சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்

ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு சென்றதால் வீட்டின் பூட்டை திறந்து ரூ.2.30 லட்சம், 2 சவரன் நகை திருட்டு