தொடர் விடுமுறை காரணமாகதிருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால், ஏப். 9: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் சனி பகவான் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதாலும், சனிக்கிழமை என்பதாலும் நேற்று அதிகாலை முதலே புதுச்சேரி, சென்னை, திருச்சி கடலூர், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

இதன் காரணமாக அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது. புனித தீர்த்தமான நளன் குளத்தில் பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடி, பின்னர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசித்தனர். சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் படையெடுத்ததால் திருநள்ளாறு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் கொரோனா பரவுவதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முக் கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்