தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் அதிரடி கைது ₹2 லட்சம் செல்போன்கள், பைக் பறிமுதல்

திருபுவனை, பிப். 23:கடந்த 3 மாதமாக திருபுவனை பகுதியில் தொடர் வழிப்பறி நடந்து வந்தது. இதில் சில மர்ம நபர்கள், பைக்குகளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் திருபுவனை-சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள ரைஸ் மில் சந்திப்பில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பிஸ்வேஸ்வர் ஜனா (42) என்பவரிடம் இருந்து 3 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். அவர் திருபுவனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர்.

இது குறித்து மேற்கு பிரிவு எஸ்பி வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் ஆகியோரது உத்தரவின்பேரில், திருபுவனை எஸ்ஐ இளங்கோ மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை 3 பேர் கும்பலை இரவுநேர வாகன சோதனையில் திருபுவனை திரையரங்கம் அருகில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் பரசுரெட்டிப்பாளையம் சிவனு மகன் ராம்பிரசாத் (20), கண்டமங்கலம் அருகே உள்ள விநாயகபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜவேல் (19), மதகடிப்பட்டு புதிய காலனி பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் வசந்த் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், ஒரு பைக் மற்றும் ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை