தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி,ஏப்.15: தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர். வரும் 23ம் தேதி தேரோட்ட வைபவம் நடக்கிறது.

தூத்துக்குடியில் பாகம்பிரியாளுடன் அருள்பாலிக்கும் சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் (13ம் தேதி) துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம்அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், கால சந்தி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, சிறப்பு யாகசாலைக்கு பின் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்திற்கான கால்நாட்டு விழாவும் நடந்தது. இந்த சித்திரை திருவிழா கொடியேற்றம் மற்றும் கால்நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் ஏப்.23ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். அத்துடன் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளலைத் தொடர்ந்து வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு