தூத்துக்குடியில் உள்ளாட்சித்துறை சிஐடியு பணியாளர்கள் சாலைமறியல்

தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித்துறை சிஐடியு பணியாளர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், மாநகராட்சி, நகராட்சி பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த முறையை கைவிடவேண்டும், தூய்மை பணிகளில் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ஐந்தாண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக மாநகராட்சியில் பணியாற்றுவோருக்கு ரூ.771, நகராட்சியில் பணியாற்றுவோருக்கு ரூ.656, பேரூராட்சியில் பணியாற்றுவோருக்கு ரூ.579 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத்தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முனியசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். சிஐடியூ மாநில செயலர் ரசல், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க துணைத் தலைவர் சங்கரன், சிஐடியூ நிர்வாகிகள் உள்ளிட்ட உள்ளாட்சித்துறை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 40 பேரை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்