துருக்கியில் குண்டுவெடித்து 6 பேர் பலி: 50 பேர் படுகாயம்

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பிரபலமான கடைவீதியில் மக்கள் கூட்டத்தின் நடுவே குண்டுவெடித்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. துருக்கின் இஸ்தான்புல் நகரில் மிகவும் பிரபலமான தஸ்கிம் சதுக்கத்தின் அருகே இஸ்திக்லால் அவென்யூ பகுதி அமைந்துள்ளது. இங்கு சாலையின் இருபுறமும் பல்வேறு கடைகள், உணவகங்கள் அமைந்திருக்கும். இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் மக்கள் கடைவீதியில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாலை 4.20 மணி அளவில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.குண்டு வெடிக்கும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளும் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகின. தகவலறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் இறப்புகள், காயமடைந்தவர்கள் இருப்பதாக இஸ்தான்புல் ஆளுநர் அலி யர்லிகாயா தெரிவித்துள்ளார். அதே சமயம் 6 பேர் இறந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், பலி எண்ணிக்கை, வெடிகுண்டு வெடித்ததா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டிற்கு இடையே ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரும், குர்திஷ் போராளிகளும் துருக்கியில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வந்தனர். அதன்பிறகு, நாட்டில் அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் குண்டுவெடித்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட்

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

“ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி விடக்கூடாது” : ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்