தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்

 

மதுரை, ஏப். 15: தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் பசுத்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பழத்தோட்டங்களில் ஊடுபயிராக கால்நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர் சரவணக்குமார் கூறியதாவது: தீவனப் பயிர்களான தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் ஊடு பயிராக பயிரிடலாம்.

3 வருட காலம் இவற்றை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படுகிறது.  மதுரை மாவட்டத்தில் 90 ஏக்கர் செயல்திட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 எச்பி திறன் கொண்ட மின்சாரம் மூலம் இயங்கும் புல் அறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 2 கால்நடைகளுடன் அரை ஏக்கரில் தீவனச் சாகுபடியில் ஈடுபட வேண்டும்.

சிறு, குறு விவசாயிகள், பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம விவசாயிகளுக்கு, இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்