திருவொற்றியூர் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் லாரிகள்: பொதுமக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் லாரிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவொற்றியூரிலிருந்து பேசின்சாலை வழியாக பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மற்றும் சிபிசிஎல் சந்திப்பை கடந்து மாநகர பேருந்து, லாரி, கார், பைக் என ஏராளமான வாகனங்கள் தினமும் செல்கின்றன. இந்த நிலையில் சிபிசிஎல் சந்திப்பிலிருந்து பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் வரை மணலி சாலையில் தனியார் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இவ்வழியாக பிற வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் சாலையில் நிற்கும் லாரிகளை கடந்து மற்ற வாகனங்கள் செல்லும் போது ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்படுகிறது. இந்த சாலையில் சிபிசிஎல் நிறுவன காம்பவுண்டு அருகே வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு நிறுத்தும் வாகனங்களுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை சிபிசிஎல் காம்பவுண்டு சுவரில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி லாரிகளை சாலையோரம் நிறுத்தியுள்ளனர். எனவே போக்குவரத்து போலீசார் மணலி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இது போன்ற தனியார் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு