திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு தினமும் மாலையில் படியுங்கள் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க 2 நாள் பயிற்சி வகுப்பு திருவாரூரில் மத்திய மண்டல ஐ.ஜி., துவக்கிவைப்பு

 

திருவாரூர், ஜூலை 22: திருவாரூரில் மனநலம் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பினை மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். கோவை சரக டி.ஐ.ஜி., விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை போன்று ஒரு சில போலீசார் தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பணியில் இருக்கும் போது மாரடைப்பு காரணமாகவும் ஒரு சில போலீசார் இறக்கின்றனர். இந்நிலையில் போலீசாருக்கு மனநலம் குறித்து பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மண்டல காவல்துறை, பெங்களூருவைச் சேர்ந்த மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், மதுரை செல்லமுத்து ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நேற்று துவங்கியது. பல்கலைக்கழகத்தின் சமூக பணித்துறை தலைவரும் பேராசிரியருமான சிகாமணி பன்னீர் வரவேற்றார். பயிற்சி முகாமினை மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் துவக்கி வைத்து, போலீசாரின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உறுப்பினர் மற்றும் நல வாழ்வு ஆலோசகரும் மனநல மருத்துவருமான ராமசுப்பிரமணியன் பயிற்சி குறித்து பேசுகையில், போலீசாரின் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், நமது சமூகத்தினருக்கு கருணையுடன் சேவை செய்வதற்கும் மற்றும் ஆரோக்கியமான பாதுகாப்பான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தேவையான அறிவு மற்றும் திறன்களை கொண்டு போலீசாருக்கு வலுவூட்டுவதற்கான ஒரு பயிற்சி முகாமாகதான் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, இதனை உரிய முறையில் போலீசார் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முகாமில், தஞ்சை சரக டி.ஐ.ஜி., ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி., சுரேஷ்குமார், பல்கலைக்கழக பதிவாளர் திருமுருகன், டாக்டர் கண்ணன், பேராசிரியர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்