திருவாரூர் மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 25 கிமீ தூரம் தூய்மை பணி

திருத்துறைப்பூண்டி, மே 26: திருவாரூர் மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 25 கிமீ தூரம் தூய்மை பணி துவங்கப்பட உள்ளது என்று திருத்துறைப்பூண்டி சுற்றுச்சூழல் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் 7500 கிலோ மீட்டர் நீண்ட கடற்கரை உள்ளது. அதிகமான கடல் வளங்களுடையது. ஒரு நாட்டின் பெயரால் அமைந்துள்ள பெருங்கடல் என்பது இந்தியப் பெருங்கடல் மட்டுமே. கடலில் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது ஒரு சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்குகளின் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தனை ஆய்வுகளிலும், கடல் சூழலை பிளாஸ்டிக்குகள் பாதிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். கடலில் வாழும் மீன்கள் பாதிப்படைகின்றன, அதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது . மேலும், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் அதிக அளவில் கடலில் சென்று சேர்வதால், கடல் சூழலியல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.நமது கடல் மற்றும் அதன் சுற்றுசூழலை நாம் பாதுகாக்கும் வகையில், மாபெரும் தூய்மையான கடற்கரை பிரசாரத்தை செயல்படுத்துவோம் இதன் மூலம் 7500.கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை மேலும் தூய்மை பெறும்.

கடலின் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்க கூடிய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதுடன், எப்படி குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலின் சமநிலையை, கடலின் காலநிலையையும் பாதிப்பதை எடுத்துரைக்கிறது. என்பதை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் பிரசாரத்தை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு ஏற்படும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதற்கான செயலில் இறங்கி மக்களை ஒன்று திரட்டி குப்பைகளை அகற்றவும் முயற்சி எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதை தவிர் க்க உறுதி ஏற்பது இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சம். உள்ளூர் சமூகத்தை ஒன்று திரட்டி கடற்கரையும், கடலும் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு எப்படி உறுதுணை புரிகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரசார இயக்கமானது, நேரடியாகவும் காணொலி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாக சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் விதத்தில் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை இதன் மூலம் ஏற்படுத்தப்படும். கடற்கரையோரங்களுக்கு சென்று சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வு பிரசார பேரணிகள், சிறு நாடகங்கள் மற்றும் போட்டிகள் நடத்த வேண்டும். இதன் மூலம் கடற்கரையை மாசில்லாமல் பாதுகாப்பதுடன் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கலாம், இதற்காக திருவாரூர் மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 25 கிலோ மீட்டர் தூரம் தூய்மை பணி தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து