திருவாரூரில் 3 தாலுகாக்களை சேர்ந்த 1,212 பயனாளிகளுக்கு ரூ.5.22 கோடி மதிப்பில் இலவச மனைப்பட்டா

திருவாரூர், நவ.30: திருவாரூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் திருவாரூர், நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்து 212 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவகண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கி கலெக்டர் சாரு பேசியதாவது: உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் தான் மனிதன் வாழ்வதற்கான அத்தியாவசிய தேவைகளாகும். அதனடிப்படையில் இன்றையதினம் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுமனை பட்டா மக்களின் கனவினை நிறைவேற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட 782 பயனாளிகளுக்கு தலா ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டிலும், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட 200 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டிலும், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட 230 பயனாளிகளுக்கு தலாரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலும் என ஆயிரத்து 212 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டா என்பது பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த பாதுகாப்பானதாகும்.

பெண்களுக்காக சொத்துரிமையை பெற்றுக்கொடுத்த தமிழக அரசு தற்போது பெண்களுக்காக வீட்டுமனை பெயரில் சொத்தை வழங்கியுள்ளது. மேலும் பெண்களுக்காகவே தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், மாதம் ரூ ஆயிரம் உரிமைதொகை மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ ஆயிரம் உதவிதொகை போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியான திட்டமாகவும், பெயர் சொல்ல கூடிய திட்டமாகவும் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி மகளிர் குழு என்று ஒன்று உருவாக்கப்பட்டு சுழல்நிதி மற்றும் வங்கி கடன் வழங்கப்படுவதன் மூலம் மாநிலத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருவதுடன் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கியும் வருகின்றனர்.

மேலும் வங்கிக்கடன் பெறும்போது அதனை குடும்ப செலவுகளுக்காக பயன்படுத்துவதை தவிர்த்து சிறு, சிறு தொழில்களில் முதலீடு செய்து பயனடைய வேண்டும் என மகளிரை கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு அரசு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தங்களது இருப்பிடத்தினை விட்டு மாறுவதற்கு மனமில்லாமல் இருந்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக இனி வரும் எந்த காலத்திலும் நீர்நிலை புறம்போக்குகளுக்கு பட்டா வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மக்கள் எந்தவித வருத்தமுமின்றி நீர்நிலை பகுதிகளில் வசிக்காமல் அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் வசிக்க விரும்பவேண்டும்.

மேலும் மாவட்டத்தில் குடியிசையில்லா நிலையை உருவாக்க வேண்டும் என தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக 54 ஆயிரம் பேருக்கு அரசு நிதியுதவியுடன் வீடுகள் கட்டிகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதில் 30 ஆயிரம் பேர்கள் வீடுகள் கட்டியுள்ள நிலையில் மீதமுள்ள 24 ஆயிரம் பேர்களில் ஒரு சிலர் கட்டுமான பணியிலும், குறிப்பிட்ட சதவிகிதம் பேர் பணியே துவக்காமலும் இருந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே குடிசையில்லா மாவட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திடும் வகையில் பட்டா பெற்றுள்ள அனைவரும் உடனடியாக வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என பயனாளிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சாரு பேசினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சண்முகநாதன், ஆர்டிஓ சங்கீதா, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், தாசில்தார்கள் நக்கீரன் (திருவாரூர்), செந்தில்குமார் (நன்னிலம்), தேவகி (குடவாசல்) மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்