திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க 12 புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள்: எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக 12 புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். எனவே, கிரிவல பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் இயங்கும் ரோந்து வாகனமும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. அது தவிர, கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சீருடை அணியாத போலீசாரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், கிரிவலப் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்கான கூடுதல் ஏற்பாடாக, 24 மணி நேரமும் இயங்கும் இருசக்கர ரோந்து வாகனங்கள் கடந்தாண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து கிரிவலம் பாதையில் குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பதிலாக,12 புதிய இருசக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கு அரசு வழங்கியுள்ளது. அதில், வாக்கி டாக்கி மற்றும் வாகனத்தின் நடமாட்டத்தை கண்காணிக்கும் செயலி ஆகியவை இடம் பெற்றுள்ளன. புதிய ரோந்து வாகனங்களை நேற்று மாலை எஸ்பி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டவுன் டிஎஸ்பி குணசேகரன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்