திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மொட்டையடிக்கும் பக்தர்களை புகைப்படம் எடுக்கும் பணி

 

திருப்போரூர், ஆக.13: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் முருகன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் ஆடி, சித்திரை, மாசி, தை ஆகிய மாதங்களில் வரும் கிருத்திகை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மொட்டை அடிக்கும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொட்டை அடிக்கும் மண்டபம் அமைக்கப்பட்டு, கோயில் சார்பில் 15 பணியாளர்களுக்கு அதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக ரூ.30 வழங்கப்படுகிறது.

இதை கணக்கிடுவதற்காக மொட்டை அடிக்கும் கட்டண ரசீதை சேகரித்து அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கேற்ப பணம் பெறும் நடைமுறை இருந்து வந்தது. இதில், முறைகேடுகள் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் ெமாட்டை அடிக்கும் மண்டபத்தில் தற்போது கேமராவுடன் கூடிய கணினி பொருத்தப்பட்டுள்ளது. மொட்டை அடிக்க வரும் பக்தர் கேமரா முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், உள்ளே சென்று மொட்டை அடித்து முடித்த பிறகு மீண்டும் கேமரா முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ரசீது பிரிண்ட் செய்யப்பட்டு அப்பணியாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த ரசீதுகளை சேகரிக்கும் மொட்டை அடிக்கும் பணியாளர் கோயில் அலுவலகத்தில் கொடுத்து அதற்கேற்ற கட்டணங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் மொட்டைக் கட்டண ரசீதினை போலியாக தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத கிருத்திகையின்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை நேற்றைய ஆடிக்கிருத்திகையின்போது முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நேர்மையான நடைமுறைக்கு பக்தர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்