திருப்பத்தூரில் காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி காசநோய் பாதித்தவர்களில் ஆண்டுக்கு 6.70 சதவீதம் இறக்கின்றனர்-கலெக்டர் பேச்சு

திருப்பத்தூர் : காசநோய் பாதித்தவர்களில் ஆண்டுக்கு 6.70 சதவீதம் பேர் இறக்கின்றனர் என திருப்பத்தூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு பேசுகையில், `காசநோய் மைக்ரோ பாக்டீரியா டியூபர் குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் வருகிறது. இதனை 1882ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி டாக்டர் ராபர்ட் கோச் என்பவர் கண்டறிந்தார். அந்த நோய் கண்டறிந்த நாளே காசநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.காசநோயால் பாதித்தவர்களில் ஆண்டுக்கு 6.7 சதவீதம் பேர் இறக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நோயானது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காசநோய் உள்ளவர்களிடம் இருந்த மற்ற நபர்களுக்கும்  தொற்று நோயாக பரவுகிறது. ஆனால், சிறுவர்களுக்கு ஏற்படும் காசநோயானது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை’ என்றார்.தொடர்ந்து, மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்)  மரு.கொ.மாரிமுத்து காசநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.  முடிவில் டாக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.அனைத்து  அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காச நோயாளிகளை கண்டறிய திங்கட்கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கும், செவ்வாய்க்கிழமைகளில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், புதன்கிழமைகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஏஆர்டி மாத்திரைகள் எடுத்து கொள்ளும் நபர்களுக்கும், வியாழக்கிழமைகளில் காசநோய் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கும், வெள்ளிக்கிழமைகளில் சாதாரண நபர்களுக்கும் காசநோய் பரிசோதனை நடைபெறுகிறது.எனவே, இருமல், சளி, மாலை நேரங்களில் காய்ச்சல், திடீர் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, விளையாட்டு மற்றும் உணவு உட்கொள்ள ஆர்வம் காட்டாத குழந்தைகளை பரிசோதனை செய்து கொண்டு காசநோயை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்….

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி