திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்

 

திருத்தணி: திருத்தணியில் அறக்கட்டளை மூலம் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருத்தணியில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை மூலம் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.  ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை தலைவரும் முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ரகுநாதன் ஏற்பாட்டில் தொடரும் இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ஆன்மீக சான்றோர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில், திருக்கழுக்குன்றத்தில் இருந்து பாதயாத்திரையாக நேற்றுமுன்தினம் வந்த ஏழுமலையான் பக்தர்களுக்கு இங்குள்ள ராமாராவ் திருமண மண்டபத்தில் தங்க வைத்து முதலுதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருப்பதி ஏழுமலையான், திருவுருவ படத்துக்கு சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். அனைவரும் ஏழுமலையானை வணங்கி அன்னதானத்தை உண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி நேற்று பாதயாத்திரையாக புறப்பட்டு திருப்பதி திருமலை சென்று அடைந்தனர்.

இந்த அன்னதான விழாவில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் உடல் ஆரோக்கியத்துடன் வாழவும், மக்கள் அனைவரும் நோயின்றி வாழவும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை உறுப்பினர் திலகவதி ரகுநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் ஷியாம் சுந்தர், அசோக்குமார் மற்றும் புகைப்படக் கலைஞர் மதிவாணன், மத்தூர் பன்னீர்செல்வம், தீனதயாளன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்