திருபுவனை அருகே அரிசி ஆலை அதிபரிடம் ரூ.3.50 கோடி மோசடி

திருபுவனை, மார்ச் 8: தனியார் ஆலையில் அரிசி வாங்கி ரூ.3 கோடியே 57 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை மாநிலம் திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையம் பகுதியில் தனியார் அரிசி ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த அருணை மற்றும் நவீனா ஆகிய இருவரும் சேர்ந்து அரிசி வியாபாரம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர். 2016 முதல் 2020 வரை 4 ஆண்டுகள் அரிசி வாங்கி விற்பனை செய்த நிலையில் அதற்கான பணத்தை கொடுக்கவில்லையாம். அரிசி ஆலை உரிமையாளர் பலமுறை அவர்களிடம் கேட்டும், பணத்தை தராமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.

இவ்வாறு ரூ.3 கோடியே 57 லட்சத்து 58 ஆயிரம் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளதாக தனியார் அரிசி ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அரிசி ஆலை நிர்வாகத்தினர் புதுச்சேரி சீனியர் எஸ்பியை சந்தித்து அனைத்து பில்களையும் சமர்ப்பித்து பணம் தராமல் ஏமாற்றிய மதுரையை சேர்ந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதையடுத்து மதுரையை சேர்ந்த 2 பேர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க சீனியர் எஸ்பி சுவாதிசிங், திருபுவனை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.3 கோடியே 57 லட்சம் மோசடி செய்த நபர்களை பிடித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் விரைவில் மதுரை சென்று சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அரிசி ஆலை அதிபரிடம் ரூ.3.50 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் திருபுவனையில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்