தமிழக ஆளுனர் ஆர்.எஸ்.எஸ்.காரர்

நாகப்பட்டினம்,ஏப்.14: தமிழக ஆளுனர் ஆர்எஸ்எஸ்காரர். அதனால் தான் அவர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிறைவேற்றுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே நடுக்கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சிங்கராயர், சிவசாமி நினைவு அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் எம்பியுமான செல்வராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கதவுகளே தேவையில்லை. ஏன்னென்றால் கதவுகள் என்றைக்கும் திறந்தே இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொல்கிறோம். உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த தவறை திருத்ததான் சாதிவாரி கணக்கெடுப்பை கேட்கிறோம். இந்தியாவில் 4600 சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில், விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல், விகிதாச்சார நடைமுறையில், தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வர கூடாது என்பதுதான் முதல் விஷயம். அதன் அடிப்படையில்தான் கூட்டணி அமைத்தோம்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நம் கட்சி சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தை நீக்க முடியாது. நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தைதான் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. தற்போதை தேர்தல் ஆணையம், மோடி, அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதை நிறைவேற்றுகிற வேலையைதான் செய்து வருகிறது. தமிழக ஆளுனர் ஆர்எஸ்எஸ்காரர். அதனால் அவர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிறைவேற்றுகிறார். அதற்காக அவர் நிறைய அவமானங்களை சந்தித்து வருகிறார். அதைப்பற்றி அவர் கவலைப்பட வில்லை. ஒன்றிய அரசும், ஆர்எஸ்எஸ்சால் நடத்தப்படும் அமைப்பு. சமூகத்தில் மாற்றம் ஏற்பட கூடாது என்று நினைக்கிற அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்