தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதி கோரிக்கை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இறுப்பு உள்ளதால், தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடலாம்.

இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த வருடம் ஜூலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், 3.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்தவுடன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த மே 1ம் தேதி அன்று 2,450 கன அடி வினாடிக்கு, முதலில் 500 கன அடியும் பின்னர், படிப்படியாக உயர்த்தி 2 ஆயிரம் கன அடியாகவும், தற்போது 2,450 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை – தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு 3ம் தேதி வந்தடைந்தது. கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் இந்த தண்ணீர் கும்மிடிபூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், இந்த நீர்த்தேக்கம் நிரம்பியதால், கால்வாய் பணியை நிறுத்தி விட்டு தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட்டனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 12ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் 375 கன அடி தண்ணீர் வந்தது, அதன் பிறகு கடந்த 15ம் தேதி 185 கன அடியாகவும் பின், 17ம் தேதி 160 கன அடியாகவும் தண்ணீர் குறைந்த அளவே வந்தது. மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் திருப்பி விட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம், தண்ணீர் குறைந்த அளவு வருவதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர். இந்நிலையில் ஆந்திர அதிகாரிகள் கடந்த சில 3 நாட்களுக்கு முன்பு ஆந்திர விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பி விட்டுள்ளனர். இதனால் தற்போது, தண்ணீர் ஜீரோ பாயிண்டில் 340 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த மே 1ம் தேதி முதல் இதுவரை தமிழகத்திற்கு அரை டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு