டிரைவர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி பா.ஜ நிர்வாகியும், நடிகையுமான அலிசா மீது 5 பிரிவுகளில் வழக்கு

 

சென்னை, ஜன.26: தொழிலதிபரின் டிரைவரை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பா.ஜ பிரமுகரும், நடிகையுமான அலிசா அப்துல்லா மற்றும் அவரது மாமனார், மாமியார் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணாநகர் கிழக்கு பி.பிளாக் பகுதயை சேர்ந்தவர் சரவணன் (31). இவர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி இரவு புகார் ஒன்று அளித்தார். அதில், அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பிரபு என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருகிறேன்.

எனது உரிமையாளர் வீட்டின் அருகே கடந்த 23ம் தேதி இரவு நின்று இருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் தேவராஜ் காரினை வேகமாக ஓட்டி வந்து, என்னை திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கில் மோதும்படி வந்தார். அதை தட்டிக்கேட்ட என்னை ஆபாசமாக பேசி, அவரது வீட்டில் உள்ளவர்கள் அடிக்க பாய்ந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில், அண்ணாநகர் போலீசார் தேவராஜ் மற்றும் அவரது மருமகளான பா.ஜ மாநில நிர்வாகியும், நடிகை மற்றும் கார் பந்தைய வீரங்களையான அலிசா அப்துல்லா, தேவராஜ் மனைவி கலைவாணி ஆகியோர் மீது ஐபிசி 294(பி), 307, 323, 341, 506(1) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்த சரவணன் யார் என்றும் தெரியாமல், பா.ஜ விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில நிர்வாகி அலிசா அப்துல்லா, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில் இல்லாத வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மேலாளர் சரவணன் மீது புகார் அளித்துள்ளார். எனவே பாஜ மாநில பெண் நிர்வாகி எதற்காக கலாநிதி வீராசாமி மற்றும் அவரது மேலாளர் மீது புகார் அளித்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி