டிஏபி கரைசல் தெளித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும்

நாகப்பட்டினம், ஏப்.26: திருமருகல் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.
திருமருகல் வட்டாரத்தில் திருமருகல், ஆலத்தூர், சியாத்தமங்கை, தென்பிடாகை, போலகம், அம்பல், பொறக்குடி, திருப்புகலூர், மருங்கூர், எரவாஞ்சேரி, விற்குடி, வாழ்குடி, பில்லாளி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பண பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும். இதற்கு தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் பருத்தி செடிகள் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுகிறது. இதனால் செடிகளில் அதிக பூச்சி வருவதுடன் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சந்தர்ப்பங்களில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது. ரகங்களுக்கு 75 முதல் 80 நாட்களில் 15 வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85 முதல் 90 நாட்களில் 20 வது கணுவிலும் தண்டின் நுனியை 10 சென்டிமீட்டர் அளவுக்கு கிள்ளி விடவேண்டும். காய்கள் திரட்சியாகவும், பருமானகவும் வர 2 சதவீதம் டிஏபி கரைசலை 45 மற்றும் 75 நாட்களில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் மகசூல் அதிகம் கிடைக்கும். பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு