டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் டெல்டா பிளஸ் வைரஸ் ஆய்வகம்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் டெல்டா பிளஸ் வைரஸ் ஆய்வகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணைவேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் யஸ்வந்த் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், டெல்டா பிளஸ் வைரஸ் குறித்த ஆய்வு கூடம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது.  தமிழகத்தில் உருமாற்றம் அடையும்  கொரோனோ பாதிப்பை கண்டறிய இந்த ஆய்வகம் பயன்படும். நீட்தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு இதுவரை 86 ஆயிரத்து 342 கடிதங்கள் அனுப்பியுள்ளனர். மக்கள் கருத்துருக்கள் அடிப்படையில் குழு அறிக்கை தாக்கல் செய்யும் பாஜ மற்றும் அதன் தோழமை கட்சியான அதிமுக இரண்டும் நீட் தொடர்பான தெளிவான முடிவை அறிவிக்கவேண்டும். பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நீட் பாதிப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக பாஜ துணை நிற்கும் என தெரிவித்த நிலையில் சட்டமன்றத்தில் தெரிவித்த நிலைப்பாட்டை மீறி பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நீட் குழுவுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு அந்த கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தேர்வு வாயிலாக பயிற்சியை நடத்தும் நிறுவனங்களே பெரும்பாலும் பலன் பெறுகின்றனர். நீட்தேர்வை தொடர்ந்து மருத்துவக்கல்வி பயின்ற மாணவர்கள் எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில் மாணவர்களை பாதிக்கும் அனைத்து வகையான தீர்வுகளையும் திமுக எதிர்க்கும். நீட்தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவினையே எதிர்க்கும் ஒன்றிய பாஜ அரசின் நிலைப்பாடு வன்மம் பொருந்தியதாகும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்