ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தாம்பரம், ஏப்.28: தாம்பரம் அருகே ஜேஇஇ நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் போனிவார்ட் (48). மென்பொருளாளரான இவர், கடந்த 2 ஆண்டுகளாக தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள திருவஞ்சேரி, அகரம்தென் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் இவான் ஜோஷ்வா (18), அதே பகுதியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் போனிவார்ட் வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தார். அவரது, மனைவி வெளியே சென்றிருந்தார். இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில், போனிவார்டின் மனைவி வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் ஊழியரிடம் வீட்டின் பின்பக்க கதவின் சாவியை கொடுத்து பின்பக்கமாக சென்று கதவை திறந்து உள்ளே வந்து முன்பக்க கதவை திறக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் ஊழியர் கதவை திறந்துவிட்டு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து போனிவார்ட்டின் மனைவி வீட்டில் உள்ளே சென்று படுக்கையறையை திறந்து பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில் இவான் ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் காவல் நிலைய போலீசார், இவான் ஜோஷ்வாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 5ம் தேதி இவான் ஜோஷ்வா ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதியதாகவும், அதில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் மன வருத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இருப்பினும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு