ஜூசில் விஷம் கலந்து காதலன் கொலை; கிரீஷ்மாவுக்கு இன்று குரல் பரிசோதனை: 7 நாள் காவல் முடிந்து கோர்ட்டில் ஆஜர்

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை, திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 6 நாளாக காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஷாரோனுடன் ஒன்றாக சுற்றித்திரிந்த திருவனந்தபுரத்தில் உள்ள வெட்டுகாடு, வேளி, குமரி மாவட்டம் குழித்துறை, திற்பரப்பு, நெய்யூர் கல்லூரி உள்பட பல்வேறு இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த மாதம் 14ம் தேதி ராமவர்மன்சிறையில் உள்ள வீட்டில் வைத்து ஷாரோனுக்கு கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்தார். அதன் பிறகு தான் உடல்நிலை மோசமாகி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து ஷாரோன் இறந்தார்.ஆனால் அதற்கு முன்பும் பலமுறை ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் போட்டி நடத்தி ஷாரோனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பது எப்படி? ஒருவரை விஷம் கொடுத்து எப்படி கொல்வது? என்பது உள்பட விவரங்களை இன்டர்நெட்டில் பார்த்து தெரிந்து கொண்டதாக கிரீஷ்மா போலீசிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் ஒருவரை மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சனை எப்படி கொடுப்பது என்பது குறித்த விவரங்களையும் இன்டர்நெட்டில் பார்த்து படித்து வைத்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி ஜூசில் கலந்து கொடுத்தால் மெதுவாக சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டார்.இதற்கிடையே ஷாரோன், அவரது நண்பர்களுடன் கிரீஷ்மா பலமுறை வாட்ஸ் அப்கால் மூலம் பேசி உள்ளார். அது அவரது குரல் தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக இன்று திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் வைத்து கிரீஷ்மாவின் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. கிரீஷ்மாவின் 7 நாள் காவல் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று பிற்பகலுக்குப் பின்னர் அவரை நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்து உள்ளனர். அப்போது இதுவரை விசாரணையில் தெரியவந்த தகவல்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். 10 முறை கொல்ல முயற்சி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கொலையில் கைதான காதலி கிரீஷ்மாவை நேற்று குமரிக்கு போலீசார் அழைத்து வந்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு: ஷாரோன்-கிரீஷ்மா ஆகியோர் பெரும்பாலும் திற்பரப்பு, சிற்றாறு பகுதிகளிலேயே பைக்கில் வலம் வந்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் பெரும்பாலும் கிரீஷ்மா கையில் ஜூஸ் பாட்டிலுடன்தான் இருப்பாராம். அப்போது ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் காதலன் ஷாரோனுக்கு விஷம் கலந்து கொடுத்து வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஜூஸ் கசப்பாக இருப்பதாக கூறி அதை குடிக்காமல் கீழே கொட்டி வந்துள்ளார் ஷாரோன். இப்படியாக மொத்தம் 10 முறை ஜூஸில் விஷம் கலந்து ஷாரோனுக்கு கொடுத்து உள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் கசப்பாக இருப்பதாக குடிக்காமல் கீழே துப்பி வந்துள்ளார் ஷாரோன். ஜூஸ் திட்டம் கைகூடாததால் 11வது முறையாக தனது திட்டத்தை மாற்றி இருக்கிறார் கிரீஷ்மா.அதன்படி தனது வீட்டுக்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து உள்ளார். காதலி கையால் எதை குடித்தாலும் அமிர்தம் என்று நினைத்து ஷாரோனும் அதை வாங்கி குடித்து உள்ளார். ஆனால் அந்த கஷாயம்தான் உயிரை பறிக்க போகிறது என்பதை அப்பாவி ஷாரோன் உணரவில்லை….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி