ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அதிகரிப்பு

 

ஈரோடு, பிப்.7: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச் சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. இந்த வாரச்சந்தையானது வாரம் தோறும் திங்கள் கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். இந்த சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்வர்.

பொங்கல் பண்டிகையை முடிந்த பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் குறைந்தளவே வந்தனர். இதனால், மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்தததால், சில்லரை விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இந்த வாரம் கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே சமயம் முகூர்த்த சீசன் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை விற்பனை அதிகரித்தது. இனி மாசி மாதம் பிறந்தால் தான் வழக்கம் போல் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும்’’ என்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்