சோழவந்தான் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

சோழவந்தான், டிச. 2: சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள், பசுமை வீடுகள், புதிய கட்டிட அனுமதி உள்ளிட்ட பொதுமக்களுக்கான அனைத்து பணிகளும் இந்த அலுவலகத்தின் மூலமே நடக்கின்றன.

மக்கள் பிரதிநிதிகளாக தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் இருந்தாலும், அரசு அதிகாரியான செயல் அலுவலர் இல்லாமல் எந்த கோப்புகளும் நகர்த்த முடியாது. இத்தகைய பொறுப்பான பதவிக்கு கடந்த 5 மாதங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லை. தற்காலிகமாக அலங்காநல்லூர் அல்லது பரவை உள்ளிட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக வந்து செல்கின்றனர். இவர்களால் அன்றாடம் செயல்படும் அடிப்படை பணிகளை மட்டுமே செயல்படுத்த இயலும். பெரிய அளவிலான திட்ட பணிகளுக்கு உரிய முடிவு எடுக்க முடியாது.

எனவே சோழவந்தான் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் இங்கிருந்த செயல் அலுவலர் பணி மாறுதலாகி சென்றார். அதன்பின் மற்ற ஊர் செயல் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக அவ்வப்போது வந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் அந்தந்த ஊர் பணிகளை நிறைவேற்றுவதே சிரமமான நிலையில் அடுத்த ஊர் பணிகளை முழுமையாக பார்க்க இயலாது. எனவே இங்கு உடனடியாக நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை