செய்யூர் அருகே வடை சுடும்போது தீ பற்றி எரிந்த குடிசை வீடு: டிவி, மிக்சி, கிரைண்டர் தீயில் எரிந்து நாசம்

 

மதுராந்தகம்: செய்யூரில் வடை சுடும்போது குடிசை வீடு தீ பற்றி எரிந்தது. மதுராந்தகம் ஆர்டிஓ பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி, ஆறுதல் கூறினார்.  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பாளையர் மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேணி. இவரது கணவர் மூர்த்தி. இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று முன்தினம், செங்கேணி காஸ் அடுப்பில் வாணலியில் வடை சுட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எண்ணெய்யில் ஏற்பட்ட அதிகளவு வெப்பத்தின் காரணமாக வீட்டின் கூரையில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீயானது, பனை ஓலையில் மளமளவென பரவி கரும்புகையுடன் பற்றி எரிந்தது. வீடு முழுவதும் தீ பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து செங்கேணி, அக்கம் பக்கத்தினரை கூச்சல் எழுப்பி உதவிக்கு அழைத்தார். வீட்டை விட்டு உடனே வெளியே ஓடி வந்ததால் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் வீட்டிலிருந்த டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தீயில் கருகி சேதமடைந்த குடிசை வீட்டை பார்வையிட்டு, செங்கேணிக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு