செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண அழைப்பிதழில் சென்னை டிஎஸ்பி என அச்சிட்ட மணமகன்: விஏஓ புகாரால் போலீஸ் வழக்குப்பதிவு

செய்யாறு, மார்ச் 24: செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண அழைப்பிதழில் சென்னை பயிற்சி டிஎஸ்பி என போலியாக அச்சிட்ட மணமகன் மீது விஏஓ புகாரால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா நமண்டி கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை நேற்று முன்தினம் தூசி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் சந்தோஷ்குமார்(33).

இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பட்டதாரியான இவருக்கு மார்ச் 24ம் தேதி(இன்று) திருமணம் நடைபெறுகிறது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கிய திருமண அழைப்பிதழில், சந்தோஷ்குமார் சென்னையில் டிஎஸ்பிக்கான பயிற்சியில் இருப்பதாக பொய்யாக அச்சடித்து கொடுத்துள்ளார். எனவே காவல்துறையில் பணியாற்றுவதைபோல் ஏமாற்றி உறவினர்கள், கிராம மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின்பேரில் சந்தோஷ்குமார் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்