சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையம்: நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருவொற்றியூர், மார்ச் 14: பெருநகர சென்னை மாநகராட்சி கொடுங்கையூரில் ஒருங்கினைந்த ஈரம் மற்றும் உலர் கழிவுகளின் செயலாக்க நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில் தினசரி உருவாகும் திடக்கழிவு சுமார் 6150 டன்கள். இதை மேலாண்மை செய்ய சென்னை மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள பரவலாக்கப்பட்ட பல திடக்கழிவுகள் பதனிடுதல் மையங்களுக்கு திடக்கழிவுகள் முறையே ஈரம் மற்றும் உலர் கழிவுகள் அனுப்பப்பட்டு மீதமுள்ளவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தினசரி உருவாகும் 100 சதவீத திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி பதனிடுதலுக்குட்படுத்த கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க மையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க திட்டங்கள் வறையறுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கீழ்கண்ட செயலாக்க நிலையங்கள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.

1. சந்தைகள் மற்றும் பெருமளவு கழிவுகள் உருவாக்குபவர்களிடம் இருந்து பெறப்படும் ஈரக்கழிவுகளை செயலாக்கம் செய்ய 550 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உயிரி எரிவாயு நிலையம் அமைக்கப்படும்.
2. மண்டலம் 1 முதல் 8 வரை உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து உருவாகும் ஈரக்கழிவுகளை பதனிட 800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படும்.
3. மண்டலம் 1 முதல் 8 வரை உருவாகும் உலர்கழிவுகளை மறுசுழற்சி செய்ய 1200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியங்கி பொருள் மீட்பு மையம் அமைக்கப்படும்.
4. மண்டலம் 1 முதல் 15 வரை உருவாகும் மறுசுழற்சி செய்ய இயலாத எரியக்கூடிய உலர் கழிவுகளை செயலாக்கம் செய்ய 21 மெகா வாட் திறன் கொண்ட திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படும்.

முதலில் ஈரம் மற்றும் உலர் கழிவுகளை செயலாக்கம் செய்ய இரண்டு சிப்பங்களாக திட்டமிடப்பட்டது. இதனை பரிசீலிக்கப்படும் நிலையில் இரண்டும் தனித்தனியே செயலாக்கப்படுவதில் நிதி மற்றும் செயலாக்க நிலை சிக்கல்கள் அறியப்பட்டது. எனவே தொழில்நுட்ப விவரங்கள் இதற்கென உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவில் பரிசீலிக்கப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படுத்தும் நிலையில் நிதி மற்றும் செயலாக்கத்தில் சிக்கல்களை தீர்க்க முடியும். ஒப்பந்த விலைப்புள்ளி மாநகராட்சிக்கு அதிக வருவாய் தருபவர்கள் அடிப்படையாகவும் மற்றும் இந்த திட்டத்தை ஒப்பந்ததாரர் வடிவமைத்தல், கட்டுமானம், நிதி ஆதாரம், செயலாக்குதல் மற்றும் ஒப்படைத்தல் முறையில் பொது, தனியார் பங்களிப்பு நிலையில் 20 வருடங்கள் என திட்டமிடப்பட்டது.

மண்டலம் 1 முதல் 8 வரை உருவாகும் குப்பையில் இருந்து மின்சாரம், ஈரக்கழிவுகளை உரமாக்குதல், உயிரி எரிவாயு, உலர்கழிவுகளை தரம் பிரித்து அதற்குரிய பதனிடுதலுக்கு உட்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைந்த திட்டமாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் செயலாக்கவும் மேலும் மண்டலம் 9 முதல் 15 வரையானவற்றில் இருந்து உருவாகும் உலர் எரிக்கும் தன்மையுடையவற்றையும் கொடுங்கையூர் வளாகத்தில் ஏற்படுத்தப்படும். இதற்கான ஒப்பந்த விலைப்புள்ளியை வருடாந்திர பதனிடுதல் தொகையாக நிர்ணயித்து ஒப்பந்ததாரருக்கு வழங்கவும் மற்றும் இதற்கான எதிர்ப்பார்க்கப்படும் வருடாந்திர பதனிடுதல் செலவு தொகையை சென்னை மாநகராட்சி அரசு, தூய்மை இந்தியா திட்டம், வெளியில் இருந்து நிதி ஆதாரத்தின் மூலமாக மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி