சென்னையில் இருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற பழமையான சிவலிங்கம் மீட்பு

சென்னை: சென்னை விமான நிலைய சரக முனையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில் அனுப்புவதற்கு வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்திருந்தது. அதில், சிவலிங்கம் சிலை  இருப்பதாகவும், கும்பகோணத்தில் உள்ள கலை மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை மையத்தில் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் நாகா ஆபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்தது. இந்த சிலை புதிதாக கும்பகோணத்தில் வாங்கியதற்கான சான்றிதழ் அதில் இல்லை. எனவே, அந்த சிலையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சிலையை முழுமையாக ஆய்வு செய்தனர். அதில், இந்த சிலை 18ம் நூற்றாண்டு தொடக்க காலத்தை சேர்ந்த சிலை என்பதை கண்டுபிடித்தனர். 36 செ.மீ. உயரமும், 4.56 கிலோ எடையும் கொண்ட இந்த பித்தளை சிலை, விலை மதிப்பில்லாதது என்பதும் தெரியவந்தது. மேலும், சுங்கத்துறை  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கெடிலம் என்ற பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த சிலையை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நபர்கள் யார், வெளிநாட்டில் இந்த சிலையை யார் வாங்குகின்றனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்