சுமூக தீர்வு ஏற்படாததால் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை மூடி சீல்வைப்பு

விழுப்புரம், ஜூன் 8: விழுப்புரம் அருகே மேல்பாதியில் கோயில் விவகாரத்தில் சுமூகதீர்வு ஏற்படாததால் கோயிலை மூடி வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாத நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி தேர் திருவிழாவின் போது பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு சென்றதை தட்டி கேட்டுள்ளனர். இதனால் அன்றிரவு விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னை தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 முறை அமைதிக்கூட்டம் போடப்பட்டும் சுமூகதீர்வு ஏற்படவில்லை. ஆட்சியர் பழனி தலைமையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்துபேசியபோது சுமூகத்தீர்வு ஏற்படவில்லை. இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஆலோசனை நடத்தி கோயிலை பூட்டி சீல்வைக்க முடிவு செய்தனர். இதற்காக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் அக்கிராமத்திலும், முக்கிய பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர். நேற்று காலை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோயிலைபூட்டி சீல் வைத்தார். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை